ஸ்பெயின் மன்னர், ராணி மீது சேற்றை வாரி இறைத்து அவமதித்த போராட்டக்காரர்கள்
வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடசென்றபோது மன்னர் மற்றும் ராணி மீது சேற்றை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மாட்ரிட்:
ஸ்பெயினின் கிழக்கு பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மக்களுக்கு தண்ணீர், உணவு, மின்சாரம் மற்றும் பிற அடிப்படை சேவைகள் கிடைக்காமல் தவித்தனர். நேற்றைய நிலவரப்படி, வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்தது. மேலும் பலரை காணவில்லை. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மன்னர் பிலிப் மற்றும் அவரது மனைவி லெடிஜியா ஆர்டிஸ் ஆகியோர் இன்று வாலன்சியா மாகாணத்திற்கு சென்றனர். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பாய்போர்ட்டா நகரில் உள்ள ஒரு வீதியில் இறங்கி நடந்து சென்றபோது, போராட்டக்காரர்கள் எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பினர்.
சிலர் திடீரென மன்னர் மீதும், ராணி மீதும் சேற்றை வாரி இறைத்து அவமதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மன்னர் மற்றும் ராணியை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றனர். மன்னர், ராணி மற்றும் பாதுகாவலர்களின் முகங்கள் மற்றும் ஆடைகளில் சேறு படிந்திருந்தது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
இதேபோல் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வந்த வாகனம் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. அவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.
வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்போ, அல்லது வெள்ளம் வந்தபிறகோ அரசாங்கம் போதுமான எச்சரிக்கை செய்யவில்லை, சரியான நேரத்தில் உதவி செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதன் வெளிப்பாடாக இன்று மன்னர் வரும்போது போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.