மலாவி நாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் - புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் மலாவி-இந்தியா இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Update: 2024-10-19 03:00 GMT

லிலாங்வே,

ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின் முதல் பகுதியாக, கடந்த 13-ந்தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகருக்கு சென்றடைந்த ஜனாதிபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவருடைய மந்திரி சபை உறுப்பினர்கள் வரவேற்றனர். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றார்.

அங்கு நடைபெற்ற அல்ஜீரியா-இந்தியா பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய அரசின் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'மேக் பார் வேர்ல்டு' திட்டங்களில் இணைய வருமாறு அல்ஜீரிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதனை தொடர்ந்து, தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பகுதியாக மொரிடேனியா நாட்டிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றடைந்தார். அவரை அந்நாட்டின் ஜனாதிபதி முகமது ஆல்ட் கசோனி வரவேற்றார். பின்னர் இருநாட்டு ஜனாதிபதிகளின் முன்னிலையில் இந்தியா-மொரிடேனியா இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தின் நிறைவு பகுதியாக மலாவி நாட்டிற்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டின் துணை ஜனாதிபதி மைக்கேல் யூசி நேரில் சென்று வரவேற்றார். அவரை வரவேற்கும் வகையில் காமுசு விமான நிலையத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதன் பின்னர் மலாவி ஜனாதிபதி லாசரஸ் சக்வேராவை சந்தித்து திரவுபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-மலாவி இடையே கலை, கலாசாரம், இளைஞர் விவகாரம், விளையாட்டு மற்றும் மருந்து தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாட்டு ஜனாதிபதிகள் முன்னிலையில் கையெழுத்தாகின.

அதோடு மலாவி நாட்டிற்கு மனிதாபிமான உதவியாக 1,000 மெட்ரிக் டன் அரிசி, சுகாதார ஒத்துழைப்பின் அடையாளமாக புற்றுநோய் சிகிச்சை இயந்திரம் ஆகியவற்றை திரவுபதி முர்மு வழங்கினார். மேலும் மலாவியில் நிரந்தர செயற்கை மூட்டு பொருத்துதல் மையம் அமைக்க இந்திய அரசு ஆதரவு வழங்கும் என திரவுபதி முர்மு அறிவித்தார்.

முன்னதாக அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "இந்தியா-மலாவி இடையே 60 ஆண்டுகளாக இருதரப்பு உறவுகள் நீடித்து வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. இங்கு வாழ்ந்து வரும் இந்திய மக்கள் மலாவி மற்றும் இந்தியா இடையிலான இணைப்பை பலப்படுத்துகின்றனர்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்