சூடானில் விமான விபத்து; இந்தியர் உள்பட 20 பேர் பலி
சூடானில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியான 20 பேரில் 2 பேர் சீனாவையும், ஒருவர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.;
![சூடானில் விமான விபத்து; இந்தியர் உள்பட 20 பேர் பலி சூடானில் விமான விபத்து; இந்தியர் உள்பட 20 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/1500x900_36456643-spcis.webp)
ஜுபா,
கிழக்கு ஆப்பிரிக்காவில் தெற்கு சூடான் நாட்டில் யுனைட்டி மாகாணத்தில் தலைநகர் ஜுபா நோக்கி சிறிய விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அது விபத்தில் சிக்கியதில் இந்தியர் உள்பட 20 பேர் பலியாகி உள்ளனர்.
இதுபற்றி தகவல் துறை மந்திரி கேட்வெச் பிபல் கூறும்போது, பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை சுமந்து சென்ற அந்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 20 பேர் பலியானார்கள். அவர்களில் 2 பேர் சீனாவையும், ஒருவர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள்.
இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. போலீசார் சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
தெற்கு சூடானில் 2018-ம் ஆண்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 19 பயணிகள் உயிரிழந்தனர். 2015-ம் ஆண்டில் ரஷியாவில் கட்டப்பட்ட சரக்கு விமானம் ஜுபா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியதில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.