ஜம்மு காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் பீரங்கி சோதனை

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி சோதனை நடத்தி உள்ளது.

Update: 2024-11-04 01:34 GMT

கோப்புப்படம்

ஸ்ரீநகர்,

இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதி அருகே பாகிஸ்தான் ராணுவம் பீரங்கிகளை சோதித்து பார்த்தது.

எஸ்எச்-15 பீரங்கியின் பல்வேறு ரகங்கள், இச்சோதனையில் பயன்படுத்தப்பட்டன. இந்த பீரங்கிகளில் சராசரியாக அதிகபட்சம் 30 கி.மீ. தொலைவுக்கு சுட முடியும். நிமிடத்துக்கு 6 ரவுண்டுவரை சுடலாம். ஒரு வளைகுடா நாட்டுடன் இணைந்து, சீன பாதுகாப்பு நிறுவனத்தின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட 155 எம்எம் ரக பீரங்கிகளும் சோதித்து பார்க்கப்பட்டன.

மேற்கு ஐரோப்பிய நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட எம்109 ரக பீரங்கிகளையும் பாகிஸ்தான் ராணுவம் சோதனையில் பயன்படுத்தியது. இவற்றில் 24 கி.மீ. தூரம்வரை சுட முடியும். 40 வினாடிகளில் 6 குண்டுகளை செலுத்த முடியும். துருக்கி பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கிய 105 எம்எம் ரக பீரங்கியும் சோதித்து பார்க்கப்பட்டது. பதுங்கு குழிகள், ஆளில்லாத விமானங்கள், போர் விமானங்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை சீனா வழங்கி உள்ளது. மேலும் தகவல் தொடர்பு கோபுரங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கண்ணாடி இழை கேபிள்கள் ஆகியவற்றை சீனா அமைத்து கொடுத்துள்ளது.

வளைகுடா நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகள், துருக்கி ஆகிய நாடுகளுடன் ராணுவ உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தி வரும் நிலையில், இந்த சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்