கென்யா: சர்ச்சைக்குரிய நிதி மசோதா வாபஸ்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு

கென்யாவில் நிதி மசோதாவை வாபஸ் பெறும் முடிவை ரூட்டோ அறிவித்தபோதும், போராட்டக்காரர்கள் 10 லட்சம் பேர் பேரணியாக இன்று செல்வது என்ற முடிவுடன் உள்ளனர்.

Update: 2024-06-27 03:53 GMT

நைரோபி,

கென்யா நாட்டில் வரி உயர்த்துவதற்கான செயல் திட்டம் அடங்கிய நிதி மசோதாவானது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட இருந்தது. இந்நிலையில், இந்த வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கருப்பு வண்ண டி-சர்ட் அணிந்தபடியும், விசில் அடித்தபடியும் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். ஆன்லைனில் ஹேஷ்டேக்குகள் மற்றும் டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதுபற்றி தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இந்த மசோதாவை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எம்.பி.க்களுக்கு தொலைபேசி வழியே அழைத்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் பொதுமக்களில் பலர் நெருக்கடி ஏற்படுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்தனர். சைரன் அடித்தபடியே சென்று அவர்களை ஓட செய்தனர். இதனால், தெருக்களில் இருந்த பல கடைகள் அடைக்கப்பட்டன. வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

இதுபோன்று பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வரும் சூழலில், சில புதிய வரிகள் திரும்ப பெறப்படும் என அரசும் அறிவித்தது. அவற்றில் உணவு பொருட்களில் ஒன்றான பிரட்டுக்கான வரியும் அடங்கும். எனினும், போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை.

கென்யா நாட்டில் வரி விதிப்பு நடவடிக்கைகளால், அந்நாட்டு பொருளாதாரம் சவாலான சூழலை எதிர்கொண்டுள்ளது. வேலை வாய்ப்பின்மை மற்றும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலை ஆகியவற்றால் இளைஞர்கள் உள்பட நாட்டு மக்களுக்கு வாழ்வதே கடினம் என்ற சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதனால், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அரசும் இரும்பு கரம் கொண்டு அடக்கியது. இதில், போராட்டக்காரர்கள் 27 பேர் வரை உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, வரி உயர்வுக்கான நிதி மசோதா திரும்ப பெறப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டார். அவர் தொலைக்காட்சியில் தோன்றி பேசும்போது, நிதி மசோதா 2024-ல் உள்ள விசயங்களை பற்றி தொடர்ந்து விவாதித்ததன் எதிரொலியாகவும், கென்ய மக்கள் இந்த மசோதாவை விரும்பவில்லை என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த விசயங்களை கூர்ந்து கவனித்தும், இந்த மசோதாவில் நான் கையெழுத்திடவில்லை என பேசியுள்ளார்.

இந்த நிதி மசோதாவை வாபஸ் பெறும் முடிவை ரூட்டோ அறிவித்தபோதும், கென்ய போராட்டக்காரர்கள் 10 லட்சம் பேர் பேரணியாக இன்று செல்வது என்ற முடிவுடன் உள்ளனர்.

கென்ய தலைநகர் நைரோபியை நோக்கி நாம் செல்வோம் என்ற போஸ்டர்கள் சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வரி உயர்வு மசோதா பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சிலர் கட்டிடத்தின் மீது தீ வைத்து கொளுத்தினர். இதனால், அவர்களை கலைக்க போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில், 27 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்தனர்.

பொதுக்கடனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியது. எனினும், பிரெட், மோட்டார் வாகனங்கள், எண்ணெய் மற்றும் மொபைல் வழியேயான பணபரிமாற்றம் உள்ளிட்டவற்றுக்கான வரிகள் நீக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்