ஜப்பான் ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ஜப்பான் ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

Update: 2024-10-19 07:09 GMT

டோக்கியோ,

ஜப்பானில் தாராளவாத ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்நாட்டின் பிரதமராக ஷிகெரு இஷிபா செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, ஜப்பான் ஆளுங்கட்சி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ஜப்பான் நாடாளுமன்றத்தை பிரதமர் ஷிகெரு இஷிபா கலைத்து உத்தரவிட்டார். மேலும், 27ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார். ஆளுங்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்பது மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.

இந்நிலையில், ஜப்பான் ஆளுங்கட்சியான தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் மீது இன்று பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. டோக்கியோவில் உள்ள தாராளவாத ஜனநாயக கட்சி தலைமை அலுவலகம் அருகே இன்று காரில் வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை கட்சி அலுவலகத்தை நோக்கி வீசினார். இந்த தாக்குதல் சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார், பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோட முயன்ற நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்