சிரியாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படையினர் அதிரடி தேடுதல் வேட்டை - ஒருவர் கைது
சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஜெருசலேம்,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழு, ஹிஸ்புல்லா அமைப்பு, ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இதையடுத்து, லெபனானின் ஹிஸ்புல்லா, சிரியாவில் செயல்பட்டு வரும் ஆயுதக்குழுக்கள், ஈராக்கின் செயல்பட்டுவரும் ஆயுதக்குழுக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் படையினர் நேற்று சிரியாவுக்குள் நுழைந்து அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நடவடிக்கையின்போது ஒருவர் கைது செய்யப்பட்டார். சிரியாவின் டரா நகரம் சைடா கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்திய இஸ்ரேல் படையினர் அலி சுலைமான் அல் அசி என்ற நபரை கைது செய்தனர்.
இவர் இஸ்ரேல் ராணுவத்தின் எல்லை நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை சேகரித்து ஈரானுக்கு அனுப்பி வந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.