இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே... எச்சரிக்கை விடுத்த நெதன்யாகு

ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.;

Update:2024-11-27 09:38 IST

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது.

இந்த சூழலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. இதன்பின்பு, ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது. தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

கடந்த அக்டோபரில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நடந்து வரும் மோதலில் பலர் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் லெபனானில் 3,800-க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 16 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை லெபனானின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டு உள்ளார். லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டுள்ளது.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளார். அவர் கூறும்போது, அமெரிக்காவின் முழு புரிதலோடு, நாங்கள் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான முழு சுதந்திரம் பெற்றிருக்கிறோம். ஒப்பந்த மீறலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால், ஆயுதங்களை கையிலெடுக்க அவர்கள் முற்பட்டால், நாங்கள் தாக்குவோம்.

எல்லையருகே பயங்கரவாத கட்டமைப்பை எழுப்ப முயன்றால், நாங்கள் தாக்குவோம். ஒரு ராக்கெட்டை ஏவினாலும், சுரங்கம் ஒன்றை தோண்டினாலும், ராக்கெட்டுகளை சுமந்தபடி லாரியை கொண்டு வருகிறது என்றாலும் நாங்கள் தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்