இஸ்ரேல் தாக்குதல்; லெபனானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

லெபனானுக்கு ஆதரவாக, ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் இதுவரை 10 விமானங்களில், 450 டன் அளவிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

Update: 2024-10-14 21:55 GMT

அபுதாபி,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது.

இதனால், லெபனானை இலக்காக கொண்டு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. லெபனானுக்கு எதிராக தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், லெபனானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு தெரிவித்து உள்ளது. லெபனானுக்கு துணை நிற்கிறோம் என்றும் அறிவித்துள்ளது. அதன் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹியான் உத்தரவின் கீழ், லெபனான் நாட்டுக்கான உதவிக்காக 2 வார காலம் பிரசாரம் தொடங்கப்பட்டது.

இதன்படி, உலகம் முழுவதும் உள்ள ஐக்கிய அரபு அமீரக மக்கள், லெபனானுக்கு நிதியுதவியை வழங்கி வருகின்றனர். நெருக்கடியான சூழல் தொடங்கியதில் இருந்து, லெபனான் நாட்டு மக்களுக்கு அவசர உதவியாக, ரூ.840 கோடி தொகையை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது. சிரியாவில் உள்ள லெபனான் அகதிகளுக்கு உதவியாக ரூ.252 கோடியை வழங்கியது. மொத்தம் 10 நிவாரண விமானங்களில், 450 டன் அளவிலான நிவாரண பொருட்கள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்