லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்; 10 பேர் காயம் - இஸ்ரேல் பதிலடி

இஸ்ரேலின் துறைமுக நகரான ஹைபா மற்றும் டைபீரியா நகர் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

Update: 2024-10-07 06:06 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் இதே நாளில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதனால், லட்சக்கணக்கான இஸ்ரேல் மக்கள் புகலிடங்களை நோக்கி தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரேலின் வடக்கே ஹைபா நகர் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் 6 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல் உறுதிப்படுத்தி உள்ளது.

இதேபோன்று, லெபனானில் இருந்து இஸ்ரேலின் வடக்கே அமைந்த டைபீரியா பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஒருவர் காயமடைந்து உள்ளார். இதுதவிர 3 பேர் ராக்கெட் தாக்குதலில் காயமடைந்து உள்ளனர்.

லெபனான் நடத்திய தாக்குதலில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் வழிமறித்து தடுத்தபோதும், பல ஏவுகணைகள் தாக்குதலை நடத்தி சென்றன. இதில் துறைமுக நகரான ஹைபா நகர் மீது, 5 ராக்கெட்டுகள் தாக்கின என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.

இதில் வீடு, உணவு விடுதி மற்றும் சாலை ஆகியவை பாதிப்படைந்து இருந்தன. அப்பர் கலிலீ பகுதியில் 15 ராக்கெட்டுகள் தாக்குதல் நடத்தின. மொத்தத்தில், ஹைபா நகர் மீது நடந்த ராக்கெட்டுகள் தாக்குதலில் 10 பேர் காயமடைந்து உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில், லெபனானின் தலைநகர் பெய்ரூட் அருகே பல்வேறு இலக்குகளை தாக்கி அழித்தோம் என்று இஸ்ரேல் கூறியது. வான்வழியே நடந்த இந்த தாக்குதல்களில், ஹிஸ்புல்லாவின் புலனாய்வு அமைப்பின் தலைமையிடம் மற்றும் ஆயுத கிடங்கு ஆகியவை அழிக்கப்பட்டன என தெரிவித்து உள்ளது.

இதற்கு பதிலடியாக, 120 ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை இஸ்ரேல் தாக்கி அழித்தது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் சுரங்க நெட்வொர்க் ஒன்றையும் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்