ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

Update: 2024-10-26 02:26 GMT

வாஷிங்டன்,

ஈரானின் ராணுவ இலக்குகள் மீது "துல்லியமான தாக்குதல்களை" நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎப்) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தங்கள் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரானில் உள்ள ஆட்சியும், பிராந்தியத்தில் அதன் ஆதாரவாளர்களும் அக்டோபர் 7ம் தேதி முதல் ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர். உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஈரானின் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே மத்திய கிழக்காசிய பிராந்தியத்தில் நடைபெறும் தாக்குதலை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவின் ஒத்துழைப்போ, ஆலோசனையோ இல்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் கூறுகையில், "இஸ்ரேல் தற்காப்புக்காகவும், கடந்த 1-ம் தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாகவும் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துகிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவர்களின் செயல்பாடு குறித்த கூடுதல் தகவலுக்கு நாங்கள் எங்கள் உறுப்பினர்களை இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அனுப்புவோம்" என்று அவர் கூறினார்.

இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து தெஹ்ரானில் வான் பாதுகாப்பு அமைப்புகள் சைரனை ஒலிக்க தொடங்கி உள்ளது. தாக்குதல் காரணமாக ஈரான் நாட்டின் விமான சேவை நிறுத்தப்பட்டு, வான் வழியும் மூடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்