தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
நாளை 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதி களை நோக்கி நகரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தநிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வந்தது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கை - தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை- தமிழ்நாடு கடற்கரையை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நெருங்கும். வலுவடைந்த காற்றழுத்தம் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை தமிழ்நாடு நோக்கி நகர்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
5 மாவட்டங்களில் இன்று கனமழை
அதன்படி இன்று (10-12-2024) நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை
நாளை (11-12-2024) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை
நாளை (11-12-2024) சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் 4 மாவட்டங்களில் மிக கனமழை
டிச., 12-ந்தேதி திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
டிச., 13-ந் தேதி நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
டிச., 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.