4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை'
சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி உள்ளது. இது அடுத்த 2 நாட்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும்.
இதன் காரணமாக, வட கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
5 மாவட்டங்களில் இன்று கனமழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு நாளை வாய்ப்புகள் உள்ளது. மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கையும் வழங்கப்பட்டு உள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், 11 செ.மீட்டர் முதல் 20 செ.மீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
6 மாவட்டங்களில் நாளை கனமழை
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 19 ம் தேதி, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 20 ம் தேதி, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 21 மற்றும் டிசம்பர் 22 ம் தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில், இன்று ( டிசம்பர் 17 ஆம் தேதி) தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில், இன்று (டிச.17ம் தேதி) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில், இன்று மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.