இன்று வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

டெல்டா, வட மாவட்டங்களில் 11-ந் தேதி மழை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-12-08 02:15 GMT

கோப்புப்படம்

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவாகி இருக்கிறது. இது இன்று நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்தை நோக்கி நகரும். தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் இந்த அமைப்பு மாற உள்ளது.

கடந்த வாரத்தில் வங்கக்கடலில் உருவான 'பெஞ்ஜல்' புயல் கடந்து வந்த அதே பாதையில்தான் இந்த அமைப்பு பயணிக்க இருக்கிறது. இந்த நிகழ்வு காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வருகிற 11-ந் தேதியில் இருந்து மழை தொடங்கி 15-ந் தேதி வரை தொடருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

11-ந் தேதி கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

12 மற்றும் 13-ந் தேதிகளில் தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், 12-ந் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும்,

13-ந் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால் 11-ந் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்