10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-22 08:07 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து, நாளை 'டானா' புயலாக உருவெடுக்க உள்ளது. அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 25-ந்தேதி அதிகாலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா பூரி-சாகர் தீவு இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

10 மாவட்டங்களில் இன்று கனமழை

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

11 மாவட்டங்களில் நாளை கனமழை

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்., 24ம் தேதி முதல் 28-ம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் மிதமான மழை

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நகரின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்