காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைவதில் தாமதம்
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பு வலுவடையாமல், அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதி களை நோக்கி நகரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தநிலையில், வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிச.11ஆம் தேதி தமிழகம்- இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.