11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (புதன்கிழமை) வலுஇழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.