சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-11-11 08:16 GMT

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக - இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை): தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்