இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவது அடுத்தடுத்து தாமதமானநிலையில், இன்று உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-11-11 00:49 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 6-ம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சில சாத்திய கூறுகள் நிலவியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் மியான்மர் நாட்டு கடலோர பகுதியில் அப்போது நிலவி வந்த காற்றின் சுழற்சியின் காரணமாக, தமிழகத்திற்கு வர வேண்டிய அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தடைபட்டது. ஆனால் தற்பொழுது மியான்மர் நாட்டு கடலோரப் பகுதியில் நிலவி வந்த அந்த காற்றின் சுழற்சியானது வலுவிழந்துள்ள நிலையில், இப்போது தென்மேற்கு வங்க கடல் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும். அது தமிழகத்தை நெருங்கி வந்து இன்று முதல் தமிழகத்தின் அனேக இடங்களிலும், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்தநிலையில் வங்கக்கடலில் இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்பட்சத்தில், இன்று இரவில் இருந்து 5 நாட்களுக்கு அதாவது, 15-ந் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுதினம் வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்