தீவிர மழைக்காலத்திலும் தங்கு தடையின்றி பால் விநியோகம்: ஆவின் நிர்வாகம்

தீவிர மழைக்காலத்திலும் தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்யப்படுகிறது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-16 09:09 GMT

சென்னை,

ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக, மழையால் பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க ஆவின் நிறுவனம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம், 201-க்கும் மேற்பட்ட ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் விநியோகமும், 31 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனைத்து பால்பொருட்களும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், தேவைக்கேற்ப பிற மாவட்டங்களிலிருந்து தேவையான பால், பால் பவுடர் மற்றும் பால் பாக்கெட்டுகள் கொண்டு வரபட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் தினமும் 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவரும் நிலையில், நேற்று கடும் மழை பெய்த போதிலும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப, ஆவின் நிறுவனம் தங்களது விநியோகத்தை அதிகரித்து, 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துள்ளது. இது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆவின் நிறுவனம் எல்லாக் காலக்கட்டத்திலும் பொதுமக்கள் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது. எனவே மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்