புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டம்?

தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனிதனியாக தொலைக்காட்சி சேனல்களை வைத்து இருக்கின்றன.

Update: 2024-11-03 13:40 GMT

சென்னை,

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். எந்தவொரு கட்சிக்கும் கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது. விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார். ஏற்கனவே மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார்.

அந்த அணிகளில் இடம் பெற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளை விஜய் வழங்க இருக்கிறார். அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார். நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு. அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டு உள்ளார். இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தனது கட்சி சார்ந்த செய்திகள், செயல்கள் என அனைத்தையும் ஒளிபரப்ப உள்ளார்கள்.இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. அதேபோல் விஜய்யும் தொடங்க முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. ஆனால், தொலைக்காட்சி சேனல் தொடங்குவது என்பது பெரிய விஷயம். இப்போதைக்கு 'தமிழ் ஒளி' என்று தனது சேனலுக்கு தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே பெயரில் சேனல் உருவாகுமா அல்லது வேறு பெயரில் தொடங்குவார்களா என்பது வரும் காலத்தில் தெரிய வரும் என விஜய் கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்