இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
![இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-01-2025 இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-01-2025](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/1500x900_36365722-dfhhjh.webp)
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகளை சந்திப்பதற்காக பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த அதன் தலைவர் விஜய், 2-வது கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட த.வெ.க. மாவட்ட செயலாளர்களை தனித்தனியே சந்தித்து நேர்காணல் நடத்தினார்.
இதில், மாவட்ட செயலாளர்களுடன் அவர் பேசும்போது, நிர்வாகிகளை நியமிக்கும்போது, கட்சியின் கட்டமைப்புக்கு வலு சேர்க்கும் தொண்டர்களுக்கு நிர்வாக பொறுப்புகளை வழங்க வேண்டும். அதில், எந்தவித சமரசமும் செய்ய கூடாது.
கட்சிக்காக உழைக்கும் அனைவருக்கும் உரிய நிர்வாக வாய்ப்பு மற்றும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். தலைமைக்கு புகார்கள் வரும் பட்சத்தில், மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என கூறினார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியுள்ளார். இதனால், த.வெ.க.வில் ஆதவ் அர்ஜுனா இணைய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கேனர் பரிசோதனை; சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டுக்கு வருபவர்களின் உடமைகளை ஸ்கேனர் வைத்து பரிசோதிக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஐகோர்ட்டின் அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படியும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் தம்பதி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளி வினோத் குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்செக்ஸ், நிப்டி உயர்வு
சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதகமான போக்கு மற்றும் மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் பெற்றன. தகவல் தொழில்நுட்பம், மூலதனப் பொருட்கள் மற்றும் தொழில்துறை பங்குகள் அதிக அளவில் வாங்கப்பட்டன.
மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 631.55 புள்ளிகள் உயர்ந்து 76,532.96 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது. 2,978 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் பெற்றன. 1,011 நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. 93 நிறுவனங்களின் பங்குகளின் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.
தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 205.85 புள்ளிகள் அதிகரித்து 23,163.10 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு வாக்கெடுப்பில் வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான வரைவு அறிக்கை ஏற்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வரைவு அறிக்கை அவசர அவசரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.
‘நேற்று இரவு 9.50 மணிக்கு வரைவு அறிக்கை எங்களுக்கு கிடைத்தது. அப்படி இருக்கையில், மறுப்பு குறிப்பை இன்று எப்படி தாக்கல் செய்ய முடியும்?’ என்றும் ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை
தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகளை சந்திக்க பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த அதன் தலைவர் விஜய், 2-வது கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட த.வெ.க. மாவட்ட செயலாளர்களை தனித்தனியே சந்தித்து நேர்காணல் நடத்தினார்.
இதில், மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பேசினார். அவர் பேசும்போது, நிர்வாகிகளை நியமிக்கும்போது, கட்சியின் கட்டமைப்புக்கு வலு சேர்க்கும் தொண்டர்களுக்கு நிர்வாக பொறுப்புகளை வழங்க வேண்டும். அதில், எந்தவித சமரசமும் செய்ய கூடாது.
கட்சிக்காக உழைக்கும் அனைவருக்கும் உரிய நிர்வாக வாய்ப்பு மற்றும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். தலைமைக்கு புகார்கள் வரும் பட்சத்தில், மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என கூறியுள்ளார்.
ஈ.சி.ஆர். சம்பவம் - 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சென்னை, ஈ.சி.ஆர். பகுதியில் பெண்களின் காரை இளைஞர்கள் துரத்திய சம்பவத்தில் 4 பிரிவுகளில் இளைஞர்கள் மீது கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மெட்ரோ மாதாந்திர பாஸ் நிறுத்தம்
சென்னை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ்கள் பிப்ரவரி 1-ந்தேதி முதல் நிறுத்தப்படுகின்றன. ரெயில் நிலையங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தம் செய்ய அனுமதிக்கப்படும்.
அரியானா அனுப்பும் தண்ணீரையே டெல்லியில் பிரதமரும் குடிக்கிறார்; மோடி பேச்சு
டெல்லியில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, யமுனை ஆற்றில் விஷம் கலப்பு பற்றி கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டை குறிப்பிட்டு பேசினார். அதில், டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரி ஒருவர் அரியானாவின் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்.
தோற்று விடுவோம் என்ற அச்சத்தில், பேரழிவை ஏற்படுத்த கூடிய சிலர் (ஆம் ஆத்மியை குறிப்பிட்டு) நிலைகுலைந்து போயிருக்கின்றனர். அதனால், அப்படி பேசுகின்றனர். அரியானா அனுப்பும் தண்ணீரை டெல்லியில் உள்ள அனைவரும் பருகி வருகின்றனர். இந்த பிரதமரும் அந்த தண்ணீரையே குடிக்கிறார் என பேசியுள்ளார்.