பயங்கரவாத தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கேரள ஐகோர்ட்டைச் சேர்ந்த 3 நீதிபதிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். நீதிபதிகளான அனில் கே.நரேந்திரன், ஜி.கிரீஷ் மற்றும் பி.ஜி.அஜித்குமார் ஆகியோர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக பஹல்காமில் இருந்து புறப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காஷ்மீர் தாக்குதலில் உளவு பிரிவு அதிகாரிகள் கொல்லப்படவில்லை: பாதுகாப்புத்துறை
பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குட்தலில் ஐ.பி (IB) என அழைக்கப்படும் உளவு பிரிவை சார்ந்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு பாதுகாப்புத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் உளவுத்துறை அதிகாரிகளை குறிவைத்ததாக செய்தி பரப்பப்படுகிறது என்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மணிஷ் ரஞ்சன் என்ற அதிகாரி மட்டும் கொல்லப்பட்டுள்ளார் என்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது,
அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு வழக்கு: தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொன்முடியின் கருத்துக்கள் பெண்கள் மற்றும் சைவ, வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்றும் ஆபாசம் தவிர்த்து இரு சமயத்தினரையும் புண்படுத்தியுள்ளது எனவும் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, இது துரதிர்ஷ்டவசமானது என்றும் சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
பஹல்காமில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது அசீப் பௌஜி?
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது அசீப் பௌஜி என்று பாதுகாப்பு துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த புகைப்படத்திலிருக்கும் தீவிரவாதிகள் இதற்கு முன்பு காஷ்மீரில் சில தாக்குதல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அதில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜூனைத் என்ற தீவிரவாதியின் செல்போனில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருக்கம்
அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்டுள்ள பதிவில்,
பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல், மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடியாகும். ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பஹல்காம், காஷ்மீரின் இதயம் போன்றது.
அமரன் படப்பிடிப்பின்போது, பல அற்புதமான நினைவுகள் அங்கு ஏற்பட்டன. அங்குள்ள மக்கள் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்துகொண்டனர். தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்ட அமித்ஷா
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை குறித்து ராணுவ அதிகாரிகள் அமித்ஷாவிடம் எடுத்துரைத்தனர்.
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரோம் செல்கிறார் டொனால்டு டிரம்ப்
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்கிறார். இதற்காக அவர் வெள்ளிக்கிழமை காலை தனிவிமானம் மூலம் இத்தாலியின் ரோம் நகருக்கு செல்கிறார். அதன்பின்னர், சனிக்கிழமை நடைபெற உள்ள போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் டொனால்டு டிரம்ப் பங்கேற்கிறார். இறுதிச்சடங்கிற்குப்பின் சனிக்கிழமை மாலை அவர் அமெரிக்கா திரும்புகிறார்.
சொத்துகுவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின்கீழ், துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையை துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல்: ஐ.பி.எல் போட்டியில் மவுன அஞ்சலி - பட்டாசுகள் வெடிக்க தடை
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற உள்ள மும்பை - ஐதராபாத் இடையிலான லீக் ஆட்டத்தின் போது பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த போட்டியின் போது, சியர்லீடர்கள் நடனமாடக்கூடாது எனவும், பட்டாசுகள் வெடிக்கக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.