திருப்பூரில் மூவர் படுகொலை: கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நகைக்காக மூவரும் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:-
பல்லடத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 6 முதல் 7 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கூர்மையான ஆயுதத்தை கொண்டு மூவரையும் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை ஒருவர் செய்திருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.