இந்து சமய அறநிலையத்துறையை சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் சிறைக்கு செல்வது உறுதி: அண்ணாமலை
இந்து சமய அறநிலையத்துறையை சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் சிறைக்கு செல்வது உறுதி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;

சென்னை,
பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்செந்தூர் திருக்கோவிலில் பல நூறு கோடி செலவில் ஆலய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றதாகத் திமுக அரசு கூறியது. ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் கூட முறையாகச் செய்யப்படவில்லை என்பதைத் தொடர்ந்து செய்திகளில் கண்டு வருகிறோம்.
இந்த நிலையில், கோவிலுக்குள் பக்தர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகளின் அவல நிலையைக் காணொளியாக வெளியிட்ட தமிழக பாஜவை சேர்ந்த பிரதீப்ராஜன் வீட்டிற்கு, அதிகாலை நான்கு மணிக்குக் காவல்துறையை அனுப்பி மிரட்டியிருக்கிறது திமுக அரசு. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக, தனது ஊழலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துபவர்கள் மீது, காவல்துறையையோ, குண்டர்களையோ ஏவுவது வழக்கமாகி இருக்கிறது.
திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது, இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.