இதற்காகத்தான் பெரியார் பற்றி சீமான் பேசுகிறார் - முத்தரசன் பேட்டி
கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல தினமும் பேசி வருகிறார் என்று முத்தரசன் கூறினார்.;
![இதற்காகத்தான் பெரியார் பற்றி சீமான் பேசுகிறார் - முத்தரசன் பேட்டி இதற்காகத்தான் பெரியார் பற்றி சீமான் பேசுகிறார் - முத்தரசன் பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/1500x900_36363536-chennai-08.webp)
ஈரோடு,
ஈரோடு கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வடநாட்டை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தொழில் செய்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புரியாமல் பேசி வருகிறார். இதேபோல் வேறு மாநிலத்தில் தமிழர்கள் வேலை செய்வதை என்ன செய்ய முடியும்?.
இந்த தேர்தலில் திராவிடத்துக்கும், தேசியத்துக்கும் ஒரு போரும் கிடையாது. பெரியார் பற்றி சீமான் பேதுவது புதிதல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்பு கி.வீரமணியை விட பெரியாரை சீமான் புகழ்ந்து பேசினார். இந்தநிலையில் பெரியாரை பற்றி பேசி, சீமான் தன்னை பெரிய தலைவராக காட்டிக்கொள்ள நினைக்கிறார்.
ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்ற கவர்னரின் கருத்து வரவேற்கத்தக்கது. ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல தினமும் பேசி வருகிறார். எதற்காக திருவள்ளுவர் சிலைக்கு காவி ஆடை போர்த்தி மரியாதை செலுத்துகிறார் என்றும் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் சிறந்த விவாதம் நடப்பதில்லை. பா.ஜனதாவின் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.