கன்னியாகுமரி சென்ற பயணிகள் ரெயிலின் என்ஜின் தனியாக கழன்று சென்றதால் பரபரப்பு
காட்பாடி அருகே பயணிகள் ரெயிலின் என்ஜின் தனியாக கழன்று சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயிலின் என்ஜின் தனியாக கழன்று சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி சென்ற பயணிகள் விரைவு ரெயில் இன்று காலை சுமார் 9 மணியளவில் காட்பாடி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, முகுந்தராயபுரம் - திருவலம் இடையே ரெயில் என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளுக்கு இடையிலான கப்லிங் திடீரென கழன்றது.
இதனால் ரெயிலின் என்ஜின் மட்டும் தனியாக கழன்று சென்றது. பயணிகளுடன் ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் நிற்கின்றன. பிரிந்து சென்ற என்ஜினை மீண்டும் பின்னோக்கி கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் பெட்டிகள் தனியாக நிற்கும் நிலையில், சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மற்ற ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.