அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு - பிரேமலதா எக்ஸ் தளத்தில் பதிவு
மதுரையில் தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் 25லட்சம் பேர் கலந்து கொண்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி உள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (அக்.,27) நடத்துகிறார். கட்சியின் முதல் மாநாடு என்பதால், விஜய் என்ன பேச உள்ளார், கட்சியின் எதிர்கால கொள்கைகள் என்ன, திட்டங்கள், எதிர்கால அரசியல் பயணம், அவர் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்பதை அறியவும் அவரது நெஞ்சில் குடியிருக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அதுமட்டுமின்றி இம்மாநாட்டை ஒட்டுமொத்த தமிழக மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் உற்றுநோக்கியுள்ளதால் மாநாடு தனிச்சிறப்பையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், மதுரையில் தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் 25லட்சம் பேர் கலந்து கொண்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு. மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது. உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர். மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர். உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது என பதிவிட்டுள்ளார்.