தி.மு.க. என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான் - அண்ணாமலை

வீண் விளம்பரங்களுக்கு மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து நாடகமாடுவதை நிறுத்த வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;

Update:2025-04-15 20:24 IST
தி.மு.க. என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான் - அண்ணாமலை

சென்னை,

பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சீரழிந்த சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள், போதைப் பொருட்களின் புழக்கம், காவல்துறையினருக்கே பாதுகாப்பின்மை, என தி.மு.க. அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கடுங்கோபத்தில் இருக்கையில், தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், பொதுமக்கள் தனது ஆட்சியைப் பாராட்டுகிறார்கள் என்ற கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தேவையற்ற விளம்பர நாடகங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலின், மீண்டும் ஒருமுறை மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க, மத்திய அரசுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைப்பதற்கான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அரசு அமைத்துள்ள பல குழுக்களில் இதுவும் ஒன்று. மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பதற்கு முன், கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு அமைத்துள்ள குழுக்களுக்கு எவ்வளவு நிதி செலவிட்டுள்ளது என்பதையும், இந்தக் குழுக்களினால் என்ன தீர்வு கிடைத்துள்ளது என்பதையும், முதல்-அமைச்சர் முதலில் அறிவிக்க வேண்டும்.

இன்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் பேசும்போது, கல்வி மற்றும் நீதி நிர்வாகம், மாநிலப் பட்டியலிலிருந்து, பொதுப் பட்டியலுக்கு ஏதோ கடந்த வாரம் மாற்றப்பட்டது போல் பூடகமாகப் பேசியிருக்கிறார். கடந்த 1976 ஆம் ஆண்டு, 42வது சட்டத் திருத்தம் மூலம் அவை பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. கடந்த 40 ஆண்டுகளாக, மத்திய அரசில் குறிப்பிடத்தக்க பல அமைச்சரவைப் பதவிகளை வகித்த திமுக, இதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. மத்திய அரசில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருக்கும்போது மட்டுமே மாநில உரிமைகளைப் பற்றி திமுகவுக்கு ஞாபகம் வருகிறது.

இன்றைய தீர்மானத்தில் திரு. மு.க.ஸ்டாலின் நீட் பற்றிப் பேசினார். தனது கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் சுகாதாரத் துறை இணை அமைச்சருமான திரு.காந்தி செல்வன் தான், கடந்த 21/12/2010 அன்று நீட் தேர்வை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார் என்பதை, முதல்-அமைச்சர் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த 2013 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுதான், நீட் தேர்வை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்களை தாக்கல் செய்தது, மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு, நீட் தேர்வை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீகோர்ட்டில் யார் வாதிட்டார்கள் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும், கடந்த 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர் என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும், ஏனெனில் இந்த முக்கியமான தகவல், முன்னாள் நீதிபதி திரு. ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையில் வேண்டுமென்றே விடுபட்டுள்ளது.

கடந்த 1969 ஆம் ஆண்டு, அன்றைய தி.மு.க. அரசு அமைத்த மத்திய-மாநில உறவுகள் விசாரணைக் குழுவைப் பற்றியும் மு.க. ஸ்டாலின் இன்று தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது தந்தையும் தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி, சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி திரு. பி.வி. ராஜமன்னார் அவர்கள் தலைமையில், கடந்த 1969 ஆம் ஆண்டு மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு தனது அறிக்கையை, கடந்த 1971 ஆம் ஆண்டு மே மாதம், தமிழக அரசுக்கு சமர்ப்பித்தது. பின்னர் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழக சட்டமன்றம் இந்த அறிக்கையை மத்திய அரசை ஏற்றுக்கொள்ளக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

கடந்த 1971 ஆம் ஆண்டு திமுக அரசு வெளியிட்ட ராஜமன்னார் குழு அறிக்கையின் பரிந்துரைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்ட, நாட்டின் பாதுகாப்பு மற்றும் போர்ச் சூழல் சார்ந்த தொழில்கள் குறித்த Entry 7 ல், ஆயுதத் தொழிற்சாலைகள் தவிர மற்றவை அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று இந்தக் குழு விரும்பியது.

மத்திய அரசு பட்டியலில் உள்ள எண்ணெய் வயல்கள் மற்றும் கனிம எண்ணெய் வளங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் சார்ந்த Entry 53, 54 மற்றும் 55 ஆகியவை மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

Entry 76 – மாநிலங்களின் செலவுக் கணக்குகளின் தணிக்கை, மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

Entry 48 – எதிர்காலச் சந்தைகள், மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

Entry 5, 8, 17, 19, 22, 23, 24, 25, 28, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 மற்றும் 42 – இந்தப் பதிவுகள் முழுவதுமாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

எந்தவொரு மாநிலத்திலும், அந்த மாநிலத்தின் அனுமதி இல்லாமல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அனுமதிக்கக்கூடாது

மாநில அமைச்சரவையின் ஒப்புதலின் பெயரிலேயே கவர்னரை நியமிக்க வேண்டும்.

அகில இந்தியப் பணிகளுக்கான தேர்வு மொழியாக, ஆங்கில மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். (மாநில மொழிகளைக் குறிப்பிட மறந்து விட்டார்கள்)

மக்கள்தொகையைப் பொருட்படுத்தாமல், நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்கு சம பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். (இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய 2 ஆண்டுகளுக்குப் பிறகு, கருணாநிதி அவர்கள், மக்களவையில் தமிழகத்திற்கான இடங்கள் அதிகரிக்காமலேயே, மக்களவையில் மொத்த இடங்கள் 525 இலிருந்து 545 ஆக அதிகரிக்கப்பட ஒப்புக்கொண்டார்.)

ஆங்கிலம் தொடர்ந்து ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் குறித்து கடந்த 1971 ஆம் ஆண்டு, நமது முன்னாள் பாரதப் பிரதமர், பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பேசுகையில், திமுக அமைத்துள்ள குழுவின் பரிந்துரைகள், பிரிவினைவாதத்தை ஆபத்தான அளவிற்கு ஊக்குவிக்கும் என்றும், நீதிபதி ராஜமன்னார் போன்ற மரியாதைக்குரிய நபரை, பிரிவினைவாத அரசியலின் அடையாளமாக முன்வைத்திருக்கிறது திமுக என்றும் குற்றம் சாட்டினார். அதன் பின்னர், மத்திய அரசு திமுக குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, அந்தப் பரிந்துரைகள் நடைமுறைக்கு ஏற்றவை அல்ல என்று தெளிவுபடுத்தியது.

திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் முதல் இன்று வரை, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பிரிவினையை தூண்டுவதாகத்தான் அமைந்திருக்கிறது. அதன் ஒரு பகுதிதான், மாநில சுயாட்சி என்ற முகமூடி. உண்மையில் திமுக அரசின் இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் மாநில சுயாட்சிக்கானவை அல்ல.

தங்கள் அரசு பல வழிகளில் ஊழல் செய்யவும், அந்த ஊழல்கள், எவ்வித விசாரணைக்கு உள்ளாகாமல், தாங்கள் தப்பித்துக் கொள்ளவும் மட்டுமே இது போன்ற பல பரிந்துரைகள் ராஜமன்னார் குழு அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. திரு. கருணாநிதி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, வருங்காலத்தில் தனது கட்சியின் ஊழல் பாதைக்கு அடித்தளம் அமைக்க நடந்த முயற்சிதான் இது.

ராஜமன்னார் குழுவின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்றான, மாநிலங்களுக்கு வரிப் பங்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசாங்கங்கள் பெரிய அளவில் செயல்படுத்தவில்லை, ஆனால் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து, மாநில அரசுக்கான வரிப்பங்கீட்டை விரைவாக மேம்படுத்தியிருக்கிறார்.

கடந்த 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில், பத்து ஆண்டுகளில் மத்திய அரசின் வரிப்பங்கீடு மற்றும் மானியங்கள், தமிழகத்திற்கு ₹1,52,902 கோடியாக இருந்தன. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில், கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, 11 ஆண்டுகளில் இது ₹6,21,938 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்திற்கு போதிய வரிப்பங்கீடு வழங்கப்படவில்லை என்று முதல்-அமைச்சர் உள்ளிட்ட திமுகவினர் கூறுவது முழுப்பொய்யே.

தனது ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மறைக்க, வாரம் ஒரு நாடகமாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள், திமுகவின் பிரிவினைவாதத்தை தமிழக மக்கள் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை என்பதை உணர வேண்டும். வீண் விளம்பரங்களுக்கு மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து நாடகமாடுவதை நிறுத்திவிட்டு, சீர்குலைந்து கிடக்கும் மாநில நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்