பாலம் கட்டியது தி.மு.க. அரசுதான் - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

குமரி கண்ணாடி பாலம் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.;

Update: 2024-12-31 10:09 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "தமிழக முதல்-அமைச்சர் நேற்று கன்னியாகுமரிக்குச் சென்று கண்ணாடி இலை பாலத்தை திறந்து வைத்திருக்கிறார். அதை அவர் கொண்டு வந்தது இல்லை. 2018-ல் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் விதமாக பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

சாகர் மாலா திட்டத்தின் அடிப்படையில், அந்த திட்டத்தை மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அந்த திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று, சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழை பெற்றோம். 2020-ல் கொரோனா காலம் என்பதால் அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த தி.மு..க அரசு, டெண்டர் விட்டு அந்த பணியை செய்திருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாலம் கட்டியது திராவிட மாடல் ஆட்சியில்தான். யார் திட்டத்திற்கு நிதி ஒதுக்கினார்கள், யார் செயல்முறைப்படுத்தினார்கள் என்பதுதான் முக்கியம். பலர் சட்டமன்றத்தில் கூட அறிவிப்பார்கள். அதனால் பாலம் கட்டினார்கள் என சொல்ல முடியாது.

கன்னியாகுமரி கண்ணாடி பாலம் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஒப்பந்தம் கோரி நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்தினோம். தன் இருப்பை தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி கூறும் அனைத்தும் உண்மையில்லை.

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டது. திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு, படுத்து உறங்கிவிட்டு எங்களது திட்டம் எனக் கூறினால் அது சரியல்ல" என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்