தமிழக மீனவர்கள் கைது: மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்;

Update:2025-03-27 21:11 IST
தமிழக மீனவர்கள் கைது: மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கோப்புப்படம்

சென்னை,

இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், அந்நாட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரியும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

'27.03.2025 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கைக் கடற்படையினர் கடந்த 3 மாதங்களில், 11 வெவ்வேறு சம்பவங்களில் 147 மீனவர்கள் மற்றும் 19 படகுகளை சிறை பிடித்துள்ளனர்.

இந்தச் சூழலில், 2024 டிசம்பர் மாதம் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, நமது மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் பிரச்சனையை இலங்கை அதிபரிடம் தனிப்பட்ட முறையில் எழுப்பியதாகவும், இந்திய மீனவர்களின் நலனை உறுதியாகக் காப்பதில் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று 09.02.2025 நாளிட்ட தங்களது கடிதத்தில் உறுதியளித்திருந்தீர்கள். இருப்பினும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது.

எனவே, நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும், தூதரக முயற்சிகளைத் முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு விடுத்த தமது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். மேலும், இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சட்ட உதவிகளையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்