தமிழக முதல்வரின் கேரளப் பயணம் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவோடு முதல்-அமைச்சர் தமிழகம் திரும்ப வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-12-11 06:54 GMT

கோப்புப்படம் 

சென்னை,

கேரளா சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவுடன் தமிழகம் திரும்ப வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கேரள மாநிலம் கோட்டயத்தில் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை நேரில் திறந்து வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள மாநிலத்திற்கு சென்றிருக்கிறார்.

முல்லைப்பெரியாறு அணையில் ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுப்பதோடு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கார் பார்க்கிங் அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வரும் கேரள அரசின் பிடிவாதப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் போதுமான நீரின்றி கருகிய நிலையிலும், கடந்த ஆண்டு பெங்களூரு சென்று கூட்டணிக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மாநில முதல்-அமைச்சரை காவிரிநீரை திறந்துவிட வலியுறுத்தாமல் திரும்பியது போல் இல்லாமல், இம்முறை கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கேரள மாநிலத்திற்கான பயணம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயனுள்ளதாக அமைய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, சுயநலத்திற்காகவும், கூட்டணி தர்மத்திற்காகவும் மாநில உரிமைகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் மீண்டும் ஒருமுறை அடகு வைக்காமல், இந்த வாய்ப்பை பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவோடு தமிழகம் திரும்ப வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்