தூத்துக்குடியில் கப்பல் மாலுமி சரமாரி வெட்டிக்கொலை
கொலை வழக்கு தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சகாயகுமார். இவருடைய மகன் மரடோனா (வயது 29). கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்த இவர் ஈஸ்டர் பண்டிகை விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். மரடோனா நேற்று முன்தினம் இரவில் தனது நண்பரான கிளிட்டஸ் (28) உள்ளிட்ட 4 பேருடன் திரேஸ்புரத்தில் கடற்கரைக்கு செல்லும் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆலன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று உள்ளார். இதனால் கிளிட்டஸ் உள்ளிட்டவர்கள் ஆலனை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆலன் கடற்கரைக்கு சென்று விட்டார்.
அதன்பிறகு கிளிட்டஸ் உள்ளிட்ட 4 பேரும் திரேஸ்புரம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு இருந்த ஆலனை மீண்டும் சத்தம் போட்டனர். அப்போது அங்கு இருந்த தாளமுத்துநகரை சேர்ந்த மதன் (28) என்பவர் ஆலனுக்கு ஆதரவாக பேசி உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதன், அவரது நண்பர்களான ரிட்சன், ஸ்டெபின் மற்றும் ஆலன் ஆகியோர் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் மரடோனாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற கிளிட்டசுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மரடோனாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிந்து மதன், ஆலன் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.