போலீஸ் என்கவுன்டர்: வடமாநில கொள்ளையர்கள் வருகை முடிவுக்கு வருமா?
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.;

சென்னை,
'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' என்று சொல்வதாலோ என்னவோ, வடமாநிலங்களில் இருந்து இங்கு வேலை தேடிவருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.ஆரம்பத்தில் சென்னை, கோவை, திருப்பூர் நோக்கி இருந்த வடமாநிலத்தவர்களின் வருகை இப்போது தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து விட்டது. இவை எல்லாவற்றுக்கும் ஒரே காரணம், தமிழகம் பாதுகாப்பான மாநிலம், வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்கும் என்பதுதான்.
ஆனால், இப்போது தொழிலாளர்களையும் தாண்டி, கொள்ளையர்களும் தமிழகத்தை குறிவைத்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி சென்னை பெருங்குடியில் உள்ள பாங் ஆப் பரோடாவிலும், பிப்ரவரி மாதம் 20-ந் தேதி கீழக்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் அடுத்தடுத்து ரூ.39 லட்சம் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் இரு கொள்ளை சம்பவங்களும் வடமாநில கொள்ளையர்களால் அரங்கேற்றப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. அடுத்த வங்கிக்கு கொள்ளையர்கள் குறிவைப்பதற்குள் அவர்களை கொத்தாக தூக்கிவிட வேண்டும் என்று போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்த நேரத்தில், வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வங்கிக் கொள்ளையர்கள் தங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு ரகசியமாக கிடைத்தது. நள்ளிரவில் போலீசார் நடத்திய வேட்டையில், தப்பமுயன்ற 5 கொள்ளையர்களும் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் இதுதான்.ஆனால், அதன்பிறகு தமிழகத்தில் வங்கிக் கொள்ளை என்பது நடைபெறவில்லை. என்கவுன்டர் மூலம் வங்கிக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் யாரும் கழுத்தில் தங்கச் செயின் அணிந்துகொண்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில்தான், நேற்று சென்னையில் நந்தனம், சாஸ்திரிநகர், இந்திரா நகர், கிண்டி, வேளச்சேரி, விஜயா நகர் ஆகிய இடங்களில் சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.இதனால், உஷார் அடைந்த போலீசார், ஆங்காங்கே, இரும்பு தடுப்பு அமைத்து சோதனை மேற்கொண்டனர். விமான நிலையத்திற்கும் தகவல் பறந்தது. யாராவது கடைசி நேரத்தில் வந்து விமானத்தில் செல்ல டிக்கெட் கேட்டால், அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது. போலீசார் தெரிவித்தது போல் ஐதராபாத் செல்லும் விமானத்திற்கு கடைசி நேரத்தில் 2 பேர் டிக்கெட் எடுத்துக்கொண்டு விமானத்துக்குள் சென்றனர்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் விமானத்துக்குள் அனுமதி வாங்கிச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார், விமானத்தைவிட்டு இறக்கி வெளியே கொண்டுவந்தனர். அதே நேரத்தில் சென்ட்ரலில் இருந்து ரெயிலில் தப்பிச்செல்ல முயன்ற மற்றொரு கொள்ளையன் ஆந்திரா அருகே கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், அவர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றபோது, அதில் குலாம் என்பவர் தப்பிசெல்ல முயன்று போலீசாரை நோக்கி சுட்டபோது, பதிலுக்கு சுட்டதில் போலீஸ் துப்பாக்கி குண்டுக்கு இரையானார். இன்னும் இந்த கொள்ளை சம்பவத்தில் 20 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.
இப்படி போலீஸ் வேட்டை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இந்த என்கவுன்டர் சம்பவத்துடன் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் முடிவுக்கு வருமா? அல்லது இன்னும் தொடருமா? என்பது போலீசாரின் தொடர் நடவடிக்கையை பொறுத்தே இருக்கிறது.