கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடலா? - அன்புமணி ராமதாஸ்

மழை ஓயும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-15 14:01 GMT

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள், அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டாஸ்மாக் பொதுத்துறை நிறுவனம் தான் என்றாலும், மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பள்ளிகள், அலுவலகங்களுக்கு செல்வதில் இடையூறுகள் ஏற்படும் என்பதால் தான் அவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறு இருக்கும் போது மதுக்கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டிய தேவை என்ன?. அது என்ன உயிர்காக்கும் மருந்தா அல்லது மக்களால் தவிர்க்க முடியாத அத்தியாவசிய சேவையா? மது குடிக்க வேண்டும் என்று மதுக்கடைகளுக்கு செல்வோருக்கு மழை வெள்ளத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாதா?

கொட்டும் மழையிலும் மதுக்கடைகளை திறந்து வணிகம் செய்வது தான் திராவிட மாடல் சேவையா?. மழை, வெள்ளத்தால் சென்னையிலும், சுற்றுப்புற மாவட்டங்களிலும் ஆபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், மதுக்கடைகளை திறப்பதால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து, மழை ஓயும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்