நெல்லை வ.உ.சி. பூங்காவில் விளையாடிய சிறுமியின் கால் விரல் துண்டாகி விபத்து
நெல்லை வ.உ.சி. பூங்காவில் விளையாடிய சிறுமியின் கால் விரல் துண்டாகி விபத்து ஏற்பட்டது.;

நெல்லை,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில், அம்ருத் திட்டத்தின் கீழ் வ.உ.சி. பூங்கா கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அதிக அளவில் இருப்பதால், அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து விளையாடுகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் 7 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வ.உ.சி. பூங்காவிற்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சறுக்கு பலகையில் ஏறி விளையாடியபோது, சிறுமியின் கால் விரல் எதிர்பாராத விதமாக துண்டாகி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் துண்டான விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பூங்காவில் முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை ஆண்டியப்பன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.