நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் உறுதியாக உள்ளது-அமைச்சர் எ.வ.வேலு
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் செயல்பட்டு வருகிறது.;
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கட்டிடத்தில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். பின்னர், அதுவெறும் டைல்ஸ் வெடிப்பு என்பதை பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
இதையடுத்து அங்குவந்த பொதுப்பணித்துறை அமைச்சர எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நாமக்கல் கவிஞர் மாளிகை என்பது, 1974-ல் கட்டப்பட்டு திறக்கப்பட்ட ஒரு மாளிகை. இங்குதான், தலைமைச் செயலகத்தின் முழு அலுவலகமும் இருக்கிறது. இதன் முதல் தளத்தில், வேளாண்மைத்துறை செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில், திடீரென விரிசல் ஏற்பட்டது என்றொரு பீதி, அலுவலகத்தில் ஏற்பட்டதால், அலுவலகத்தில் பணியில் இருந்த அனைவரும், வெளியே வந்துவிட்டனர்.
இந்த செய்தி கிடைத்தவுடனே, இங்கு வந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கட்டிடத்தின் உறுதித்தன்மை எந்த காரணத்தாலும், உருகுலையவில்லை. அது உறுதியாகவே இருக்கிறது. தரைதளத்தில், 14 ஆண்டுகளுக்கு முன்பாக டைல்ஸ் பதிக்கப்பட்டது. அப்போதெல்லாம் 2க்கு 2, 2க்கு 4 என்ற டைல்ஸ்கள் எல்லாம் தயாரிக்கப்படாத காலம். 1க்கு1 என்ற அடிப்படையிலான டைல்ஸ்கள் தயாரிக்கப்பட்டிருந்த காலம் அது. எனவே, இதெல்லாம் அந்த காலக்கட்டத்தில் பதிக்கப்பட்ட டைல்ஸ்கள்.
இவ்வகை டைல்ஸ்களில், நாளடைவில் தானாக ஏர் கிராக் விழும். இந்த ஏர் கிராக்கைப் பார்த்துதான், கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுவிட்டதோ, என்ற அச்சத்தில் பணியாளர்கள் வெளியேறிவிட்டனர். சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர், நிர்வாகப் பொறியாளர், மேற் பொறிளார்கள் உள்ளிட்ட அனைவரும் சோதனை செய்தனர். இந்த கட்டிடம் உறுதியாக உள்ளது.
அதேபோல், முன்பெல்லாம் டைல்ஸ் பதிக்கும்போது, சிமெண்டும், மணலும் கலந்து மட்டும் பதித்துவிடுவார்கள். அந்த கலவை நாளடைவில் சுருங்குவதால்,தான் இதுபோன்ற ஏர் கிராக்குகள் விழுகின்றன. தற்போது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரசாயனங்கள் சேர்த்து டைல்ஸ்கள் பதிக்கப்படுகிறது.
இன்று அல்லது நாளைக்குள், ஏர் கிராக் விழுந்த டைல்ஸ்களை நீக்கிவிட்டு, புதுவகையான டைல்ஸ்களைப் பதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பணியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.