தென்பெண்ணை ஆற்றில் மாயமான வாலிபர் பிணமாக மீட்பு

தென்பெண்ணை ஆற்றில் மாயமான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2024-12-17 15:22 GMT

விழுப்புரம்,

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகள் சேதமடைந்தன.

இதற்கிடையில், திருக்கோவிலூர் அருகே உள்ள பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ரமேஷ். இவர் அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் அங்குள்ள தென்பெண்ணை ஆற்றின் அணைக்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் மாலை மீன்பிடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, திடீரென ரமேஷ் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து, சக்திவேல் அக்கம்பக்கத்தினரிடம் கூறினார்.

தொடர்ந்து அவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருக்கோவிலூர் போலீசார், தீயணைப்பு வீரர்களும் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சி. மெய்யூர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் ரமேஷின் உடல் நேற்று கரை ஒதுங்கியது. இதை அந்தபகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரமேஷ் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்