மொழி அரசியலை இனிமேலாவது தி.மு.க. கைவிட வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை விட்டது வரவேற்கத்தக்கது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Update: 2024-10-20 00:16 GMT

கோப்புப்படம் 

கோவை,

கோவை சென்ற பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழுக்கு தி.மு.க.வினர் மட்டுமே உரிமையானவர்கள் என்பது போல பேசுகின்றனர். பா.ஜ.க.வினர் தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் என காட்ட முயற்சிக்கின்றனர். இதற்கான வெளிப்பாடு தான் பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது.

ஏதாவது ஒரு காரணம் கிடைக்குமா? என முதல்-அமைச்சர் பார்த்துக்கொண்டு இருக்கிறார். தமிழை சொல்லி மக்களை ஏமாற்றினோம். இனிமேலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். மற்றொரு மொழியை சொல்லி தமிழை யாரும் சிறுமைப்படுத்த முடியாது. எனவே மொழி அரசியலை இனிமேலாவது தி.மு.க. கைவிட வேண்டும்.

என்னை கூட இந்தி இசை என விமர்சிக்கின்றனர். தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. தி.மு.க.வினரின் குழந்தைகள் எத்தனை பேர் தமிழ் படிக்கின்றனர். தமிழ்த்தாய் வாரம் கொண்டாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்பது விடுபட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை.

உள்நோக்கம் இல்லாத ஒன்றை உள்நோக்கத்துடன் செய்ததாக காட்ட முயற்சிக்கின்றனர். தெரியாமல் செய்த தவறை பெரிதாக்குகின்றனர். எதையாவது பூதாகரமாக செய்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை விட்டது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்