காதல் விவகாரம்: சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்
காதல் விவகாரத்தில் 17 வயது சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

தூக்குத்துடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது 17 வயது மகளும், பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த அய்யனாரும், அவரது மனைவியும் தங்களது மகளை கண்டித்துள்ளனர். இதையடுத்து சிறுமி, அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
மேலும் சிறுமியை அவரது பாட்டி வீட்டுக்கு, பெற்றோர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 23-ம்தேதி அங்கு வந்த 2 இளைஞர்கள் சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். உயிருக்கு போராடிய சிறுமி மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், அவரை கொலை செய்ய முயன்றது பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எட்டயபுரம் போலீசார் சந்தோஷ், முத்தையா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.