"பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தம்" - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆதங்கம்
திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

திருப்பூர்,
அதிமுக - பாஜக கூட்டணி, கண்டிப்பாக மீண்டும் அமையும் என அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர், தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தினங்கள் முன் சென்னை வந்த அமித் ஷா, பாஜக - அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தி அறிவித்தார்.
அதில், பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் ஒன்றிணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். அடுத்து வரப்போகிற தேர்தலை என்.டி.ஏ. கூட்டணியின் இதர கட்சிகளுடன் இணைந்து சந்திக்க இருக்கிறோம் என்பதை உங்களுக்கு அறிவிக்கிறேன். என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் பேசுகையில்,பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம், அதிமுக என்றும் உங்களுடன் துணை நிற்கும் என்றார். இதே நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன் பேசுகையில், நாதழுதழுக்க குரல் உடைந்து, கட்சியை உடைக்க பார்க்கின்றனர், நிர்பந்தம் காரணமாக கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.