9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருதுகளை உடனே வழங்குக - ராமதாஸ் வலியுறுத்தல்

தொல்காப்பியர் விருதுகளை உடனடியாக வழங்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-11-09 06:25 GMT

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"செம்மொழிக்கு சிறந்த முறையில் சேவையாற்றியவர்களுக்காக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது உள்ளிட்ட குடியரசுத் தலைவர் விருதுகள் கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. அன்னை தமிழுக்கு அறிஞர்கள் சேவை செய்வதை ஊக்குவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இந்த விருதுகள் கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டாக வழங்கப்படாதது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகமும், தமிழ் வளர்ச்சிக்கு போடப்படும் முட்டுக்கட்டையும் ஆகும்.

கடந்த 9 ஆண்டுகளில் இந்த விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. கடந்த 2021-22ஆம் ஆண்டு வரை இந்த விருது பெற தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் பல ஆண்டுகளுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் பின், கடந்த சில ஆண்டுகளாக இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ் செம்மொழிக்கான சேவை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கு கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகியவற்றை உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு மத்திய பல்கலைக் கழகத்திற்கு இணையான தகுதி வழங்கி, அதன் வாயிலான மொழி ஆராய்ச்சிகளை அதிகரிக்கவும் மத்திய அரசு முன்வரவேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்