திருச்சி கோர்ட்டில் இன்று ஆஜராகாவிட்டால்.. சீமானுக்கு பிடிவாரண்டு

டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.;

Update:2025-04-08 03:08 IST
திருச்சி கோர்ட்டில் இன்று ஆஜராகாவிட்டால்.. சீமானுக்கு பிடிவாரண்டு

கோப்புப்படம்


தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சமூக ஊடக தளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சி மாவட்ட குற்றவியல் நான்காவது கோர்ட்டில் டி.ஐ.ஜி. வருண் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். எனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் தெரிவித்து இருந்தார்

இந்த வழக்கு விசாரணைக்காக 7-ந் தேதி(நேற்று) சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த விசாரணையின்போது நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் சீமான் அதற்கான நோட்டீசை பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் நேற்று காலை அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக டி.ஐ.ஜி. வருண்குமார் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். இதையடுத்து மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சீமான் ஆஜராகவில்லை என்றால் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சீமான் தரப்பில் ஆஜரான வக்கீல், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றதால், அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே சீமான் நாளை (அதாவது இன்று) கோர்ட்டில் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்ற நீதிபதி, சீமான் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்