ரெயில் முன் பாய்ந்து கணவன்- மனைவி தற்கொலை... மகளின் காதல் திருமணத்தால் விபரீதம்

17 வயதில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.;

Update:2025-04-27 16:51 IST

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ஜெகதேவி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 50). இவருடைய மனைவி கவிதா (45). இந்த தம்பதிக்கு 17 வயது மகளும், சதீஷ் (23) என்ற மகனும் உள்ளனர். குமார் சொந்தமாக மினி லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.

இந்தநிலையில் மகள் அதேப்பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி அதேப்பகுதியில் உள்ள வீரபத்திரசாமி கோவிலில் வைத்து அவர்களுக்கு இருவரின் பெற்றோர்களும் திருமணம் செய்துவைத்ததாக கூறப்படுகிறது.

திருமணமான 8 மாதங்களில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வெறுப்படைந்த சிறுமி கடந்த 22-ந் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் மருத்துவ மனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் 17 வயதில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 22-ந்் தேதி குழந்தை திருமணம் செய்து வைத்ததாக குமார், அவரது மனைவி கவிதா, சிறுமியின் கணவர் கார்த்திக், அவரது தாயார் அம்சவல்லி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கிருஷ்ணகிரி கோர்ட்டில் அவர்களுக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் குமார் மற்றும் அவரது மனைவி கவிதா, கார்த்திக், அவரது தாயார் அம்சவல்லி ஆகிய 4 பேரும் கடந்த வியாழக்கிழமை முன் ஜாமீன் பெறுவதற்காக சென்னை ஐகோர்ட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். பின்னர் இருவரும் தங்கள் மகனுக்கு போன் செய்து தாங்கள் கோர்ட்டில் இருப்பதாகவும், ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் குமார், கவிதா ஆகிய இருவரும் சம்பவத்தன்று நள்ளிரவு திருப்பத்தூர்- மொளகாரன்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே கீழ் குறும்பர் தெரு பகுதியில் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். இவர்கள் கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டனர். அப்போது வேகமாக வந்த ரெயில் மோதி இருவரும் உடல் சிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சென்று உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்