கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கைதானவர்கள் எத்தனை பேர்? - தமிழக அரசு விளக்கம்

கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கைதானவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.;

Update:2025-02-07 11:31 IST

சென்னை,

தமிழ்நாட்டில் போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் 2022, 2023 மற்றும் 2024 ஆகிய 3 ஆண்டுகளில் 1,122 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் 2022, 2023 மற்றும் 2024 ஆகிய 3 ஆண்டுகளில் போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் 31 ஆயிரத்து 946 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 48 ஆயிரத்து 698 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதாவது 2022-ம் ஆண்டு 10 ஆயிரத்து 665 வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 ஆயிரத்து 325 பேரும், 2023-ம் ஆண்டு 10 ஆயிரத்து 256 வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14 ஆயிரத்து 470 பேரும், 2024-ம் ஆண்டு 11 ஆயிரத்து 25 வழக்கு பதிவு செய்யப்பட்டு 17 ஆயிரத்து 903 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்