கனமழை எச்சரிக்கை: சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் குவியும் மக்கள்

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

Update: 2024-10-14 14:24 GMT

சென்னை,

சென்னை உட்பட பல மாவட்டங்களில் நாளை முதல் அதீத கனமழைபெய்யும் என்பதால் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னையில் சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். கனமழை பெய்யும் என்பதால் ஓரிரு நாட்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டை, காய்கறிகள், குழந்தைகளுக்கான பிஸ்கட், தின்பண்டங்கள் ஆகியவற்றைக் கையிருப்பில் வைத்திருப்பதோடு, இரண்டு மூன்று நாட்களுக்குத் தேவையான துணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, கொசுவத்தி, சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் வீட்டில் உள்ளனவா என்று கவனித்து வைத்துக்கொள்ளவும், இல்லாத பொருட்களை மட்டும் அளவாக வாங்கிக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது. 

கனமழை காரணமாக சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களிடம் அவரவர்களுடைய விமான சேவைப்பற்றி சரிபார்த்து, அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்வதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மழை காலத்தில் மின்விநியோகம் சீராக இருக்க கூடுதல் பணியாளர்களை அமர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்