கனமழையால் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள்: நாளை நடத்த உத்தரவு
அரையாண்டு தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கடந்த டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுதவிர தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான தேர்வு டிசம்பர் 16-ல் தொடங்கி 23-ம் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையானது வழங்கப்பட்டது. இதனால் அந்த நாட்களில் நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் தள்ளிப் போனது.
இதன்படி 6-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலத் தேர்வும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு சில பாடங்களுக்கான தேர்வும் நடத்த முடியாமல் போனது. அந்த தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் அரையாண்டு தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந்தேதி கனமழையால் விடுமுறை விடப்பட்டு நடத்த முடியாமல் போன அரையாண்டு தேர்வு, நாளை (சனிக்கிழமை) நடத்தப்பட வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.