வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிரான அரசின் தீர்மானம் - திமுக - பாஜக இடையே காரசார விவாதம்
வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவிற்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் பாஜக வெளிநடப்பு செய்தது;

சென்னை,
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்து முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டது.
மத்திய அரசின் வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவிற்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. முன்னதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசினார் . அப்போது சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது .
வானதி சீனிவாசன் - இஸ்லாமிய சமூகத்தோடு பிற்படுத்தப்பட்ட மக்களும் பெண்களும் முன்வர வேண்டும் என்பதற்காகவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த , சட்டத்துறை அமைச்சர் ரகுபதி - மதத்தின் அடையாளமாக கருதப்படும் வாரியத்தில் மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்களை புகுத்துவது எந்தவகையில் நியாயம் ? . இஸ்லாமிய சொத்துக்கள் பாதுகாக்க கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை நீர்த்துப் போகும் வகையில் தற்போது சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.
வானதி சீனிவாசன் - வக்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் பற்றிய விவாதம் என்றால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கருத்திற்கும் என்னால் பதில் அளிக்க முடியும். வக்பு வாரிய சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையிலேயே சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. - நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் மட்டுமல்ல நாடு முழுவதும் பயணித்து பல்வேறு சமூக மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்பு தான் அந்த பரிந்துரை வழங்கப்பட்டது.
அமைச்சர் ரகுபதி - நாடு முழுவதும் பெயரளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு ஆட்சேபனைகளை ஏற்காமல், ஆதரவாளர்கள் அளித்த பரிந்துரைகள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது.
வானதி சீனிவாசன் - ஜனநாயக முறைப்படி மக்கள் தேர்ந்தெடுத்த நீங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததைபோல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசும் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது.
அமைச்சர் ரகுபதி - அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு எந்தவித விவாதமுமின்றி தாங்களே தாக்கல் செய்து தாங்களே நிறைவேற்றிக் கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் - கூட்டுக்குழு கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம் எம் அப்துல்லாவுக்கு பேச அனுமதி வழங்கவில்லை. ஆனால் இங்கு வானதி சீனிவாசன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் இந்த சட்டமன்றத்தில் உங்களை அனுமதிக்கிறோம். ஆனால் அங்கு எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை
வானதி சீனிவாசன் - சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வரும் போது அதன் செயலாக்கத்தன்மையை யோசிக்க வேண்டும். மாநில அரசைப் போலவே மத்திய அரசுக்கும் அதிகாரம் உள்ளது.
சபாநாயகர் அப்பாவு - இந்த பேரவையில் கொண்டு வரப்பட்ட இருமொழிக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை தான் பாராளுமன்றமே ஏற்றது
வானதி சீனிவாசன் - மத்திய அரசின் சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்கிறது. என தெரிவித்தார்.