கன்னியாகுமரியில் திறப்புக்கு தயாரான கண்ணாடி பாலம்

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் தற்போது திறப்புக்கு தயாராகியுள்ளது.

Update: 2024-12-29 11:21 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், உலகுக்கு பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவருக்கு பிரமாண்டமாக 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 1-1-2000 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி நாளை (திங்கட்கிழமை)முதல் 3 நாட்கள் தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதற்காக குமரி மாவட்ட நிர்வாகம் கன்னியாகுமரி சுற்றுலாத்தலத்திலும், கடலின் நடுவே திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைப் பகுதியிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் தற்போது திறப்புக்கு தயாராகியுள்ளது.

திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

கன்னியாகுமரிக்கு வந்ததும் மாலை 6 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கும், கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தையும் திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சரின் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்