திடக்கழிவில் இருந்து உரம்: விவசாயிகளுக்கு விலைஇன்றி வழங்கப்படுமா..? அமைச்சர் கே.என்.நேரு பதில்
பல்வேறு நகரங்களில் குப்பை மேலாண்மை பெரிய பிரச்சனையாக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.;

கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, கம்பம் நகராட்சியில் திடக்கழிவில் இருந்து உரம் தயார் செய்து விவசாயிகளுக்கு விலைஇன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "பல்வேறு நகரங்களில் குப்பை மேலாண்மை பெரிய பிரச்சனையாக உள்ளது. நிறைய இடங்களில் பயோ மைனிங் முறையில் குப்பை அகற்றி நிலமாக மாற்றி உள்ளோம்.
பல நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இந்த இடத்தில் அமைக்க வேண்டாம் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குப்பை மற்றும் கழிவுநீர் பிரச்சினையை கையாள பொதுமக்களின் கருத்துகளை அறிந்து செய்ய வேண்டி உள்ளது. இதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
நாகர்கோவில் பகுதியில் மக்கும், குப்பை மக்கா குப்பைகள் வசதி ஏற்படுத்தி தர வாய்ப்புள்ளதா? என்று உறுப்பினர் தளவாய் சுந்தரம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "கன்னியாகுமரி மாவட்டத்தில் குப்பைகள் கிடங்கிறகு இடம் கிடைப்பது சிரமம். பொதுமக்கள் வீடுகளிலே மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்து தரப்படும். குப்பை கொட்டும் கிடங்கு அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.